Friday, December 22, 2017

திருக்கோவில் அமைவிடம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியிலிருந்து 10 km தொலைவிலும், பழவேற்காட்டிலிருந்து 8 km தொலைவிலும், மீஞ்சூரிலிருந்து 16 km தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது. சென்னை செங்குன்றம் (Redhills) பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி வழியாக பழவேற்காடு செல்லும் அனைத்து பேருந்துகளும் இத்திருத்தலத்தின் அருகில் நின்று செல்லும். மீஞ்சூர் மற்றும் பொன்னேரியிலிருந்து நிறைய பேருந்துகள் செல்கின்றன. செங்குன்றத்திலிருந்து 558பி என்ற பேருந்து திருப்பாலைவனம் செல்கிறது. மேலும் 558, 558பி, 58சி, 56பி, 95 ஏ, சுந்தரம் 28 என்ற எண்ணுள்ள பேருந்துகளும் திருப்பாலைவனம் வழியாக செல்கின்றன.

திருக்கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை: 7.00 முதல் - 12.00 மணி வரையும்
மாலை: 4.30 முதல் - 8.30 மணி வரையும்.

தொடர்புக்கு:

விஷ்வபதி குருக்கள்: (+91) 96919 80505.

தலபுராணம்

அமிர்தத்திற்காக மந்தாரமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை கயிராகவும் கொண்டு பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து உண்டான ஆலகால விஷத்தை இறைவன் உண்டு நீலகண்டனாக மாறியதும், அமிர்தத்தை தேவர்கள், அசுரர்களை ஏமாற்றி பங்கிட்டு கொண்ட இடமே இந்த திருப்பாலைவனம் ஆகும்.


ஆலகால விஷமுண்ட இறைவனுக்கு அமிர்தத்தின் ஒரு பகுதியை சமர்ப்பிக்கின்றனர். அமிர்தத்தையே சிவலிங்கமாக அமிர்தேசுவரர் என்று பெயரிட்டு வழிபட்டு வந்தனர்.




தேவர்கள் அமிர்தத்தை பகிர்ந்து கொண்ட செய்தி அசுரர்களுக்கு தெரிந்ததும், அமிர்தம் உண்ட கையை இத்திருக்குளத்தின் நீரில் தேவர்கள் கழுவியதும் அந்நீரை உண்டால் சாகாவரம் பெறலாம் என்று நினைத்து அசுரர்கள் தவளை வடிவம் கொண்டு நீரில் இருக்க திட்டமிட்ட செய்தி தேவர்களுக்கு தெரியவர இக்குளத்தில் தவளைகளே இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றது இத்திருக்குளம்.



இலிங்கத்தினை சூழ்ந்து பாலைமரம் வளர்ந்தது, தேவர்கள் தேனீக்களாக நித்தமும் பூஜை செய்தனர். வாசுகி எனும் பாம்பரசன் மரத்திலுள்ள அமிர்தலிங்கத்தினை வழிபட்டு இறைவன் அருள் பெற்றார்.


வடபுலம் வென்ற முதலாம் இராஜேந்திர சோழனின் படைகள், கரும்பச்சை நிறத்தில் எலுமிச்சை மரத்தின் சிறு இலைகளைப்போல் வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த அடர்ந்த பாலை மரங்கள் நிறைந்த கடற்கரையை ஒட்டி இருந்த காட்டின் வழியே  சென்று கொண்டிருந்தன. படைகளை ஓய்வெடுக்க கட்டளையிட்ட அரசன் தன் பட்டத்து யானையை அருகில் இருந்த பாலை மரத்தில் கட்டச் சொல்ல அந்த மிகப் பெரிய அழகிய பட்டத்து யானை மூர்ச்சையாகி கீழே விழுந்தது.



அம்மரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக மன்னனுக்கு தோன்றவே,அவன்  அவன் மரத்தை வெட்ட பணித்தான்.


மரத்தை கோடரியால் வெட்ட வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டு வரவே அதிர்ச்சியும் பயமும் கொண்டு அந்த இடத்தை ஆராய்ந்தபோது தலையில் வெட்டுப்பட்ட நிலையில் சிவலிங்கம் தென்படவே மனம் நொந்த அரசன் தன்னுடைய செயலுக்கு வருந்தி இறைவர்க்கு மிகப்பெரிய அழகான கோயிலை கட்டுவித்தான்.


இத்திருத்தலத்தில்  ஆவுடையார் கல்லிலும், இலிங்கம் மரத்திலும் இருப்பது தனிச் சிறப்பு.
(குறிப்பு: இலிங்கத்தில் கோடாரிப்பட்டத் தழும்பு இன்றும் காணப்படுகிறது.)

இவ்வகை சிறப்புகளை கொண்ட இக்கோயிலில் இறைவர் பாலீஸ்வரநாதர் என்று அழைக்கப்பெறுகிறார். சுயம்பு மூர்த்தியான வெண்மை நிறத்தோடு காட்சி தரும் லிங்க வடிவை காணும் போது உண்மை அன்பர்களுக்கு உடல் சிலிர்க்கும் உள்ளம் உருகும். இங்கு வீற்றிருக்கும் அம்பாள், என்றும் பிரியாத நாச்சியார் லோகாம்பிகை என்ற திருப்பெயரோடு கிழக்கு நோக்கிய சன்னதியில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.

~ ஓம்நமசிவாய!

Friday, April 7, 2017

பிரம்மோற்சவம் (2017)

ஸ்ரீ லோகாம்பிகை உடனுறை திருபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரமோற்சவ விழா ஆலயத்தில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக துவங்கி, ஆலயத்தில் நாள்தோறும் சிறப்பு வழிபாடு பஞ்ச மூர்த்தி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ,பூஜைகள் மற்றும் காலை மாலை பூத, சிம்ம, காமதேனு வாகனம் மற்றும் ,அன்ன வாகனம் ,குதிரை வாகனத்தில் நாள்தோறும் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.










இதனை தொடர்ந்து பங்குனி மாத பிரமோற்சவ முக்கிய விழாவான தேரோட்டம் ஆயிரக்கண பக்தர்கள் தேர் வடம் பிடித்து சாமி தரிசனம் செய்தனர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அன்னை லோகாம்பிகையுடன் திருபாலீஸ்வரர் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாவித்தார்.


~ ஓம்நமசிவாய!

Saturday, January 16, 2016

ஆனைக் கோயில் (கஜபிரஸ்தா)

கோயில் கட்டட அமைப்புகளில் ஏழுவிதமான விமானங்கள் சொல்லப்படுகின்றன. அந்த விமான அமைப்புகள் சிலவற்றை அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் கூறுகிறார். அவ்விதமான அமைப்புக்களில் ஆலக் கோயில் அல்லது யானைக் கோயில் என்பதும் ஒன்று.

ஆலக் கோயில் என்றால் ஆனைக் கோயில். ஆனைக் கோயில் கட்டடங்களைக் கஜபிருஷ்ட விமானம் என்று சிற்பசாஸ்திரங்களில் பெயர் கூறப்படுகிறது. கஜபிருஷ்ட (கஜபிரஸ்தா) விமானக் கோயில்களாகிய ஆனைக் கோயில் கட்டங்கள் தொண்டைநாட்டில் (தொண்டை மண்டலத்தில்) தான் அதிகமாக இருக்கின்றன. சோழ நாட்டில் சில யானைக் கோயில்கள் மட்டும் இருக்கின்றன. பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் கஜபிருஷ்ட விமானக் கோயில்கள் இருப்பதாகத் தெரியவில்லை. தென் கன்னட மாவட்டத்தில் சில கோயில்கள் கஜபிருஷ்ட அமைப்பாக அமைந்திருக்கின்றன.

திருப்பாலை வனத்து ஆனைக் கோயிலின் அமைப்பு தனிப்பட்ட அமைப்புடன் அழகும் உடையது. மற்ற ஆனைக் கோயில்களின் அமைப்பைப்பார்த்துவிட்டு இந்தக் கோவிலின் அமைப்பைப் பார்த்தால் தான் இதனுடைய புதுமையான சிறப்பு நன்றாகத் தெரியும். மற்ற ஆனைக்கோவில்களின் அமைப்பைப் பாராதவர்கள் இந்தக் கோவில் கட்டட அமைப்பை மட்டும் பார்ப்பார்களானால் இதனுடைய அருமையும் பெருமையும் நன்கு அறியமாட்டார்கள். இந்தத் திருப்பாலைவனத்து யானைக் கோயில்போல அமைந்திருக்கிற இன்னொரு கோயில் காஞ்சிபுரத்துக்குத் தெற்கே மாகறல் என்னும் ஊரில் இருக்கிற சிவன் கோயில் கட்டடம் ஆகும். ஆனால், மாகறல் ஆனைக் கோயிலை விட திருப்பாலை வனத்து யானைக் கோயிலில் அழகான சிறப்புகள் இருக்கின்றன. இந்தக் கோவில், பிற்காலச் சோழர் ஆட்சியில் ஏறக்குறைய கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.




~ ஓம்நமசிவாய!

Friday, January 15, 2016

ஆலயப் பிரகாரம்

வெளிப்பிரகாரம்

வெளிப்பிரகாரத்தில் கொடிமரம் , பலிபீடம் மற்றும் நந்தி ஆகியன இராஜகோபுரத்திற்கு பிறகு உள்ளன.







அம்பாள் சன்னதி, பிரதான சன்னதிக்கு இடது புறத்தில் உள்ளார்ந்த பிரகாரத்துடன் கிழக்கு நோக்கி இருக்கும் சன்னதி.

பிரதான சன்னதிக்கு நுழைவாயில் தெற்கில் இருந்து நடராஜா சபா, நந்தி மற்றும் இடுப்பிடம் மண்டபம் உள்ளன.

பழமை வாய்ந்த திருபாலீஸ்வரர் சன்னதி.

விநாயகர், நாவலர், விஸ்வநாதர், மார்கண்டேயர் சிவலிங்கம், வீரபத்ரர், நாகர், பிட்சாண்டவர், வள்ளி மற்றும் தேவயானையுடன்  சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர், சூர்யன் ஆகியோருக்கு உள் பிரகாரத்தில் சன்னதி.

~ ஓம்நமசிவாய!

Thursday, January 14, 2016

இராஜக்கோபுரம்

5 அடுக்கு இராஜக்கோபுரம்.

இராஜக்கோபுரதிற்கு முன்னே 16 கல் தூண் மண்டபம்.

மண்டபதிற்கு முன்னே அழகிய தெப்பக்குளம்.

தெப்பக்குளத்தில் ஒரு தவளைக்கூட இல்லாததன் பின்னே ஒரு சரித்திர காலக் கதை.

(அமிர்தம் குடித்துவிட்டு தேவர்கள் தங்கள் கைகளை குளத்தில் கழுவ முற்படுகையில், அசுரர்கள் தவளை வடிவத்தை எடுத்துக் கொண்டு அமிர்தம் பருக முயன்றுள்ளார்கள். அவர்கள் அமிர்தம் பருகுவதைத் தடுக்க கோவில் தெப்பக்குளத்தில் தவளை இருக்கா வண்ணம் தேவர்கள் சபித்தனர், அது இன்றளவும், இக்குளத்தில் தவளைகள் இல்லாமல்!)


~ ஓம்நமசிவாய!

Friday, April 24, 2015